பொருட்பால்தூது (அதிகாரம் 69)

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
A skilful ambassador who wishes to gain his mission among other monarchs wielding the spear must be more learned than the learned.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
— சாலமன் பாப்பையா
குறள் 683 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook