பொருட்பால்சொல்வன்மை (அதிகாரம் 65)

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
A clever speaker is neither tired nor fearful; none can defeat him in a debate.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
சொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (ஏற்பச் சொல்லுதல் -அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல்.இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
— சாலமன் பாப்பையா
குறள் 647 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook