பொருட்பால்அமைச்சு (அதிகாரம் 64)

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
He is a helpful counselor who is righteous and considerate in his speech, and always knows how to act.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும்.செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
— சாலமன் பாப்பையா
குறள் 635 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook