கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
“That king who allows his sceptre to bend indiscriminately will lose his wealth together with his subjects.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.