அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின்.
“Is there anything impossible if one acts at the right time and with the proper equipment?”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?