பொருட்பால்கேள்வி (அதிகாரம் 42)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
What avails it whether men live or die, if they merely satisfy the palate and not feed the ear with wisdom.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?
— சாலமன் பாப்பையா
குறள் 420 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook