வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
“Of what avail is a man’s saintly mien, if his mind is bent on evil?”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்,துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?