துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
“In their ministering to the needs of the ascetic, verily the householders have become oblivious of their penance.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.