அறத்துப்பால்புலான்மறுத்தல் (அதிகாரம் 26)

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
The heart of a flesh-eater is devoid of love like that of the wielder of a deadly weapon.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
— சாலமன் பாப்பையா
குறள் 253 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook