தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
“He who fattens on the flesh of animals, can he ever understand the rule of love?”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக்கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?