தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
“Let not one do evil unto others, if one wants to be free from affliction.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)