அறத்துப்பால்வான்சிறப்பு(அதிகாரம் 2)

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
If the rains were to fail, there would neither be alms nor penance on this wide earth.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
— சாலமன் பாப்பையா
குறள் 19 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook