எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.
“Just as our eyes do not see the pen when writing I could not see my lover’s faults when I saw him.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
கண்ணில் மை தீட்டித் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும்,கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.