காமத்துப்பால்குறிப்பறிவுறுத்தல் (அதிகாரம் 128)

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
She looks at her bangles; she looks at her beautiful shoulders and she looks down at her feet. This is her present occupation.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.(செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
— சாலமன் பாப்பையா
குறள் 1279 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook