அறத்துப்பால்அடக்கமுடைமை (அதிகாரம் 13)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Self-control places one among the gods; lack of it leads one to the darkness of hell.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
— சாலமன் பாப்பையா
குறள் 121 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook