விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல,இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.