காமத்துப்பால்காதற்சிறப்புரைத்தல்(அதிகாரம் 113)

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
O Image in the pupil of my eye, begone! How can my fair-browed lady sit enthroned, unless you give place to her?
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக - என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே!அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
— சாலமன் பாப்பையா
குறள் 1123 / 1330
திருக்குறள் · thirukural.ai
அதிகாரங்கள்
TwitterWhatsAppLinkedInFacebook